காப்பியம், பேரிலக்கியமாகக் கொள்ளப்பட்டதால் அதிலிருந்து மாறுபட்டதாகச் சிற்றிலக்கியம் என்று ஓர் இலக்கிய வகைக்கு இலக்கண நூலார் பெயரிட்டனர். தனிக் கவிதையாகவும் அல்லாமல், கதைத் தொடர்போடு கூடிய காப்பியமாகவும் அல்லாமல் சிற்றிலக்கியம் விளங்குகிறது.
ஒரு குறிப்பிட்ட துறைத் தொடர்போடு கூடிய பாடல்களின் தொகுப்பு என்பதாக இதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே, கதைத் தொடர்பு, எதுவுமின்றி, ஒரு பொருள் அடிப்படையில், தமக்குள் தொடர்புடைய சில கவிதைகளின் தொகுப்பு சிற்றிலக்கியம்.
இது பிரபந்தம் எனவும் அழைக்கப்பட்டது. இது வடசொல். பந்தம் என்ற சொல்லுக்குக் கட்டப்பட்டது என்று பொருள்; யாப்பினால் கட்டப்பட்டது. பிரபந்தம் என்பது நன்றாகக் கட்டப் பட்டது. இலக்கண மரபிற்கு உட்பட்ட கவிதைகளாலான ஓர் இலக்கிய வகை இது.
சிற்றிலக்கியம் 96 வகைகளைக் கொண்டது என்று பிற்காலத்தில் தோன்றிய பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் உள்ளன. குறிப்பிட்ட ஒரு வகை யாப்பு அடிப்படையில் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட யாப்புகளால் உருவான கவிதைகளைக் கொண்டு எண்ணிக்கை இது அமையும்.
எனவே, யாப்பின் அடிப்படையிலும், அடிப்படையிலும், உள்ளடக்க அடிப்படையிலும் இவைகளுக்குப் பெயரிடப் பட்டன. தொடக்கத்தில் பொதுவான ஓர் உள்ளடக்கம் பற்றி இவை பாடப்பட்டன. பின்னர், அவ்வக் காலச் சூழலுக்கேற்பச்சமயம், அரசன், வள்ளல் ஆகியோர் புகழ் பாடுவதாகச் சிற்றிலக்கிய வகைகள் அமைந்தன.
சங்ககாலத்தில், ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவைகளில் பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடப்படும் மரபு இருந்தது. அடுத்து வந்த திருக்குறளிலும் பத்துப் பாடல், ஒரு வகையாக இருந்தது. ஆனால் இவை தனித்த ஓர் இலக்கிய வகையாகக் கொள்ளப்படவில்லை. இவை ஒரு பொருள் தொடர்புடையதாக அமைந்த போதிலும், இவற்றைச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கொள்ளவில்லை.
தேவாரத்திருமுறை ஆசிரியர்கள் காலத்தில்தான், பத்து அல்லது பதினொன்று பாடல்கள் கொண்ட தொகுப்பைப் பதிகம் என்று கூறினர். காரைக்கால் அம்மையார்தான் முதன் முதலாகப் பதிகம், இரட்டை மணி மாலை (இரு வேறுபட்ட பாவகைகளால் பாடப்படுவது), அந்தாதி ஆகிய சிற்றிலக்கிய வகைகளைப் பாடியவர்.
சிற்றிலக்கியத்தின் வகைகள்
சிற்றிலக்கிய வகைகள் தோன்றி, படிப்பவரிடையே வரவேற்பைப் பெற்ற பின்னர், பாட்டியல் நூற்கள் அவைகளுக்கு இலக்கணம் கூறின. இலக்கிய வகை தோன்றிய பிறகு இலக்கணம் வகுக்கப்பட்டது.
தங்கள் காலத்திலும், தமக்கு முன்னும் தோன்றிய சிற்றிலக்கிய வகைகள் அனைத்தையும் கணக்கில் கொண்டு பாட்டியல்நூலார் இலக்கணம் கூறவில்லை. மாறாக, ஒரு சில அடிப்படைகளை அவர்களே உருவாக்கிக் கொண்டு இலக்கணம் கூறினர்.
சான்றாகத் திருவாசகத்தில் இடம் பெறும் சாழல், உந்தியார். பொற்சுண்ணம், ஊஞ்சல், பூவல்லி போன்ற இலக்கிய வகைகளுக்குப் பாட்டியல் நூல் விளக்கம் கூறவில்லை. இவை யாவும் நாட்டுப்புற இலக்கிய வகைகளிலிருந்து மணிவாசகர் பெற்றவை.
இதேபோலச் சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் ஏராளமான சிற்றிலக்கிய வகைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றிற்கும் பாட்டியல் நூல் இலக்கணம் கூறவில்லை.
திறனாய்வு செய்பவர்கள் இவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழில் தோன்றியுள்ள இலக்கிய வகைகள் அனைத்திற்கும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது என்று எண்ணுதல் கூடாது. திறனாய்வு செய்து இலக்கணம் கூற வேண்டிய முற்காலப் படைப்புக்களே இன்னும் நிறைய உள்ளன. பாட்டியல் நூலார் பெரும்பாலும், யாப்பு, எண்ணிக்கை, கவிதையின் உள்ளடக்கம், கவிதையில் பின்பற்றப்படும் உத்தி ஆகியவற்றைக் கொண்டு சிற்றிலக்கிய வகைகளுக்குப் பெயரிட்டனர்.
பிரபந்தம் என்ற சொல் மட்டுமே வடமொழிச் சொல்லாகும். இவ்வளவு சிற்றிலக்கிய வகைகளோ, அவைகளுக்கு இலக்கணம் வகுக்கும் முறையோ வடமொழியில் இல்லை. எனவே, பாட்டியல் நூலார் செய்த வகைப்பாடும் இலக்கணம் கூறும் முறையும் முழுவதும் தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்டது.
சிற்றிலக்கியத்தின் பகுப்பு
ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு, ஒருவகை யாப்பிலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யாப்பிலோ, குறிப்பிட்ட எண்ணிக்கைகளை உடையதாகப் பாடல்களைப் பாடுவது சிற்றிலக்கியம் என்று மேலே பார்த்தோம். பத்து அல்லது பதினோரு பாடல்களைக் கொண்டது பதிகம்.
நாயன்மார், ஆழ்வார் பாடல்களில் பதிகங்கள் உள்ளன. 100 பாடல்களைக் கொண்டது சதகம். திருவாசகத்தில் திருச்சதகம் உள்ளது. தண்டலையார் சதகம், கொங்குமண்டல சதகம், வைராக்கிய சதகம் என்று பிற்காலத்தில் வெவ்வேறு வகைகளில் பெருகின.
ஒன்றிற்கு போலத் மேற்பட்ட பாவகைகளைக் கொண்டு மாறி மாறி மாலை தொடுக்கப்படுவது ஒரு வகை இரட்டைமணி மாலை, மும்மணி மாலை, நான்மணி மாலை என்று இவை அமைந்தன. மாலைக்குப் பதிலாகக் கோவை எனவும் வேறு சில பெயர்பெற்றன.
உள்ளடக்க அடிப்படையில் சில இலக்கிய வகைகளைப் பகுத்தனர். (காதல், தூது!, மடல், பிள்ளைத்தமிழ் (பிள்ளைக்கவி), உலா, பவனிக் குறம், குறம், பள்ளு போன்றவை இதற்குச் சான்று. பாடும் முறை அடிப்படையில் சிலவற்றைப் பகுக்கலாம். ஒரு வகையில் இது உத்தி சார்ந்தது. அந்தாதி (ஒன்றின் முடிவு, மற்றதின் தொடக்கம்), பாதாதிகேசம் (பாதம் முதல் முடி வரை), கேசாதி பாதம் என்பவை சான்றாகும்.
பல்வேறு வகையான உறுப்புக்களையும் யாப்பு வகைகளையும் கலந்து பாடும் ஒருவகைக் கலப்பு வகை கலம்பகம் எனப்பட்டது. நிகழ்ச்சி அடிப்படையில் சில இலக்கிய வகைகள் பெயர் பெற்றன. சான்றாகத் திருப்பள்ளி எழுச்சி, தாலாட்டு, பாவைப்பாட்டு என்பன.
(சிற்றிலக்கிய வகைகள் பெரும்பாலும் அரசவைப் பாடல்களாக அமைந்தன. அரசனையோ, வள்ளலையோ மிதமிஞ்சிப் புகழ்வது இதன் மையமாகும். இந்த அடிப்படையில் அவன் பாட்டுடைத் தலைவன் எனப் போற்றப்பட்டான். அவனுடைய வீரம், கொடைப் பண்பு ஆகியவற்றைப் புகழ்வதுடன் பெண்கள் அனைவராலும் அவன் விரும்பப்படுகிறான் என்று பாடினர்.
ஒரு வகையில் ஆளுபவர்களைவீர வழிபாடு செய்ய இது பயன்பட்டது. சிற்றிலக்கிய வகைகளில் மிதமிஞ்சிய கற்பனையும், அளவிற்கதிகமான புகழ்ச்சியும் காணப்படுகின்றன.
